புதிய பணியிட மாற்றம் காரணமாக, எனக்கு பல நாட்கள் ஓய்வு கிடைத்தது.
சென்னையில் இருந்து சொந்த ஊர் புதுக்கோட்டை செல்ல பயணம் மேற்கொண்டேன். பயணம் செய்வது எனக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று. அதிலும் ஜன்னல் ஓரம் உட்கார்ந்துக் கொண்டு எதிர் காற்றை அனுபவித்து, புத்தகம் படிப்பதென்றால் கொள்ளை பிரியம். சக பயணி ஒருவன் அவனது கைபேசியில் மிக இதமான திரைப்பட பாடல்களை ஒலியிட, அட அட என்ன ஒரு ஆனந்தம். அதுவும் இந்த முறை, பகல் பயணம் வேறு.
மிக ரம்மியமாக இருந்தது. நான் ஹோசே மார்த்தியின் ‘எளிய கவிதைகள்” படித்து கொண்டு வந்தேன். 8 மணி நேர பயணம் மிக அருமையாக அமைந்தது. மாலை வீடு வந்து சேர்ந்தேன்.
மறுநாள் காலை, 1 ½ மணி நேரப் பயணம் மேற்கொண்டேன், புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு, தோழியின் பிறந்தநாள், நண்பர்கள் அனைவரும் சந்தித்து வாழ்த்துக்கள் கூறினோம். பரிசுகள் பரிமாற்றம், உணவகத்தில் உணவு அருந்திவிட்டு, நண்பர்கள் அனைவரும் என் தாய், தந்தையரை சந்தித்தோம். பின் நண்பர்கள் அவர் அவர் அலுவல்களை செய்ய பிரிந்து சென்றனர்.
நான் என் பெற்றோர்களுடன், 7 மணி நேர பயணம் மேற்கொள்ள முற்பட்டேன், திருச்சியில் இருந்து கோயம்புத்தூர். இந்த முறையும் பகல் பயணம். மேலும், 2 வயது கைக்குழந்தை, என் சகோதரியின் மகன், அவனுக்கு பால் கொடுப்பது, அவனை தூங்கச்செய்வது, விளையாட்டுக் காட்டுவது என நேரம் கடந்து கொண்டிருந்தது.
இரவு தோழனின், திருமண விழா, பல வருடங்கள் கழித்து அவனை பார்க்க முடிந்தது. அவனுடன் சில மணித்துளிகள், அனைவரும் இரவு உணவு அருந்திவிட்டு ஓய்வு எடுக்க சென்றோம். ஆனால் என்னால் ஓய்வு எடுக்க இயலவில்லை. என் பெற்றோர்கள், குழந்தையுடன் ஓய்வு எடுக்க, நான் என் நண்பர்களுடன் கைபேசியில் வெகு நேரம் உரையாடினேன். பின் மறுநாள் நடக்க இருக்கும் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், உறங்கச் சென்றேன்.
திருமண முகுர்த்தம் விடியற்காலை என்பதால், வெகு சீக்கிரமாக எழுந்து அனைவரும் தயாரானோம். திருமணம், வெகு இயல்பாக விமர்சையாக நடந்து முடிந்தது. நண்பர்கள் பிரிய, இதயம் கனத்தது.
மறுபடியும், 7 மணி நேர பயணம் மேற்கொள்ள முற்பட்டேன், கோயம்புத்தூர் – திருச்சி. இந்த முறை இரவு பயணம், என் பெற்றோர்கள், கைக்குழந்தையுடன். என் அம்மா, அவளுடைய பேரனை மிக கவனமாக பார்த்துக்கொண்டாள்.
அவளும், எங்களுடன் பயணம் மேற்கொண்டிருந்த போதிலும், கண் அயராமல் குழந்தையை கவனித்து கொண்டு வந்தாள். இதுபோல் எத்தனை நாள் தன் தூக்கத்தை எனக்காக தொலைத்தாலோ தெரியவில்லை. என் கண்கள் கலங்கின.. குழந்தையை சமாளிப்பது, வளர்ப்பது ஒரு பெரிய கலை போலும். அத்தருணத்தில் தாய்மையின் பொறுமை, கவனம், அன்பு, சகிப்புத்தன்மை அனைத்தையும் உணர முடிந்தது, மிக வித்யாசமாக பயணமாக அமைந்தது.
மிக சோர்வாக வீடு வந்து சேர்ந்தோம், பயணம் தந்த உடல் அசதி, நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சி, உறக்கம் தேவைப்பட்டது. உறங்கச் சென்றோம். அதிகாலை, தோழி, இளைய சகோதரியின் குறுஞ்செய்தி, அவளும் என்னை பார்க்க ஆவலுடன் என் அறை வந்தாள். மிக சோர்வாக நான் உறங்கிக்கொண்டிருக்க, அவளோ, என்னை தன் மடியில் கிடத்தினாள். மிக மெதுவாக என் கரங்களை அழுத்திவிட்டாள். நான் அவளின், அருகாமை, அன்பு, ஸ்பரிசம் அனைத்தையும் உளமார ரசித்து கொண்டிருந்தேன்.
அப்பொழுது மெல்லிய ஒலியில் திரைப்பட பாடல்
ஒலித்துக் கொண்டிருந்தது -
“தலை சாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவாயில்லை....”
நான் பாக்கியசாலி, என் மீது அந்த கடவுளுக்கு அதிக அன்பு போலும். இந்த விலைமதிப்பற்ற, எதிர்ப்பார்ப்பு இல்லாத இவ்வுறவை என்னவென்று நான் உணர்ந்து சொல்ல? நம் நண்பர்களை நாம் தேர்ந்து எடுக்க முடியும். ஆனால் சகோதரி, சகோதர்களை? இந்த உறவு, கடவுள் நமக்கு பரிசாக அள்ளிக்கொடுப்பது.
Nice one.
ReplyDeleteThanks much...!
ReplyDelete