Friday, December 31, 2010

காத்திருப்பு...!!!


வார நாளின் ஒரு சாதரணமான நாள், கொடுக்கப்பட்ட அலுவலை செய்து முடித்துவிட்டு, என் மின் அஞ்சலை திறந்து பார்த்து கொண்டிருந்தேன். தோழர், தோழிகளின் நல விசாரிப்புக்கள், அவர்கள் செய்யும் செயல்கள், மற்றும் இன்ன பிற விஷயங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தனர். தோழி ரம்யாவின் (அம்மு என்று நான் அழைப்பேன்) செய்தி, அவளது சகோதரன் (மணிகண்டன்), என்னுடைய நண்பனும் கூட, திருமணச் செய்தி. சந்தோஷமான செய்தி. 12 Sept 2010, Sunday, கோயம்புத்தூர்யில் - அவனது திருமணம்.



இச்செய்தி, என்னை பின் நோக்கி அழைத்து சென்றது. என் குழந்தைப் பருவ பள்ளிக்கூட வாழ்க்கை நினைவில் வந்தது. அவள், தன் சகோதரன், பெற்றோர்களுடன் எங்கள் வீட்டின் அருகில் வசித்து வந்தனர். அவள் - அம்மு என்னை விட ஒரு வயது மூத்தவள், அவளின் சகோதரன் – மணி என்னை விட ஒரு வயது இளையவன். அனைவரும் ஒரே பள்ளியில் பயின்று வந்தோம். வீட்டின் அருகாமையில் இருப்பதால், எங்களின் நட்பு பள்ளியிலும், வீட்டிலும் தொடர்ந்தது. எனக்கு, இந்த நட்பு நெடுங்காலம் தொடரும் என்னும் எண்ணம் இல்லை, இது உண்மை. நான் பொய் சொல்ல விரும்பவில்லை. காரணம், நட்பு என்றாலே என்ன என்று அறியாத இளம் குழந்தை பருவம்.


இருப்பினும், நாங்கள், அனைவரும் சேர்ந்து பள்ளிக்கு செல்வோம், மதிய உணவு உட்கொள்வோம், விளையாட்டும் அப்படியே. என் அம்மா, நன்றாக அசைவ உணவுகள் செய்வாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என் தந்தை மீன், நண்டு வாங்கி வருவர். அம்முவுக்கு நண்டு என்றால் கொள்ளை பிரியம். என் அம்மா கொஞ்சம் காரமாக சமைத்து, எங்கள் அனைவரும் சேர்த்து ஊட்டிவிடுவாள். கவலைகள் அறியா பருவம்.


சிறிது வருடங்கள் கழித்து, அவளின் தந்தையின் அலுவல் காரணமாக வேறு ஊர் மாற்றலாகி சென்றனர். இளம் வயது என்பதால் எனக்கு, என்ன செய்வது என்று தெரியவில்லை, மேலும் புதிய நண்பர்களின் அறிமுகம். இருந்த போதிலும், என் பெற்றோரும் அவளுடைய பெற்றோரும் தொடர்புடன் இருந்து வந்தனர். வீட்டின் விசேஷங்களுக்கு அழைப்பது, முக்கிய விஷயங்களை பரிமாறிக்கொண்டனர்.


14 Sept 1994 வருடம், என் மூத்த சகோதரியின் திருமணம். நான் 8-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். கிட்ட தட்ட 10 வருடம் கழித்து என் தோழியையும், தோழனையும் பார்க்கும் வாய்ப்பு. அப்போதும் இளம் பருவம் என்பதால், நான், அவர்களின் பெற்றோர்களுடன் தான் அதிகம் (!?) பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள், கோவையிலிருந்து திருமணத்திற்காக வந்திருந்தனர்.



சில மணி நேரங்கள், அவ்வளவு தான். பின் பல வருடங்கள் கடந்து போயிற்று. என் தந்தை மறவாமல் ஒவ்வொரு வருடமும், புத்தாண்டு வாழ்த்து செய்தி அனுப்புவர். அவர்களும் அப்படியே, தொலைப்பேசி தொடர்பும் இருக்கும்.



2003 ஆம் வருடம், நான் அப்போது என் இளங்கலை பட்டம் முடித்த வருடம், நான் ஒரு கூடைபந்தாட்ட போட்டிக்காக, கோவை செல்லும் சந்தர்ப்பம். என் அம்மாவிடம் அவர்களின் தொலைப்பேசி எண்ணை வாங்கிக்கொண்டு சென்றேன். அங்கு நான் சென்றவுடன், தொலைபேசியில் அவளின் தாயாருடன் பேசினனேன், அவர்களும் என்னை அவர்கள் இல்லம் வருமாறு கேட்டுக்கொண்டாள். பல வருடம் கழித்து அவளையும், அவளது பெற்றோரையும் சந்திக்கப் போகும் எண்ணம், புதுமையான ஒரு உணர்வாக இருந்தது.



பேருந்து பிடித்து, பேருந்து நிறுத்தம் சென்று சேர்ந்தேன், சில மணித்துளிகளில், வெள்ளை நிற சுடிதார் அணிந்துக் கொண்டு, என்னைப் பார்த்து கை அசைத்தபடி, அவள். இன்பமான அதிர்ச்சி. சந்தோஷம். இருவரும், பேசிக்கொண்டே, அவர்களின் இல்லம் நோக்கி நடந்தோம். எங்களுக்குள் நடந்த உரையாடல்கள் இன்றும் என் நினைவில், அந்த மணித்துளிகள் என் மனத்தில் பசுமையாய்... சில மணித்துளிகளில் இல்லம் சென்று அடைந்தோம். அவள், அம்மா என்னை அழைத்து, நல விசாரிப்புகள், பள்ளிப் பருவத்தில், நானும் அவர்களின் வீட்டில் உணவு உட்கொள்வேன். அன்றும், ரசம் சாதம், அன்புடன்.



நல விசாரிப்புகள், என் எதிர்காலம் என பேச்சுக்கள் போய்க்கொண்டிருந்தது. அப்போது அவளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்த சமயம். அவள் என்னிடத்தில் தன்னுடைய கனவாளனின் புகைப்படத்தை காட்டினாள். பின் அவளது திருமணத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்றும் அன்பு கலந்த கண்டிப்புடன் கேட்டுக்கொண்டாள். எனக்கு அன்புடன், குளிர்பானம் தயாரித்தும் கொடுத்தாள்.



சின்ன மன வருத்தம், என நண்பனை காண இயலவில்லை. வெகு நேரம் அவர்களுடன் உரையாடிவிட்டு, அவளின் திருமணத்திற்கு வருவேன் என வாக்குறுதி அளித்துவிட்டு விடைபெற்று செல்ல முற்பட, சின்ன குடுவையில் தண்ணீர் கொடுத்து அனுப்பினாள், (அந்த குடுவையை வெகு நாட்கள் அவளின் நினைவாக நான் பாதுகாத்து வைத்திருந்தேன்), பின் கூடைப்பந்தாட்ட போட்டிக்கு சென்றேன்.


01 Nov 2003, அவளின் திருமண நாள், எதிர்பாராத விதமாக என்னால் அவளின் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை. என் பெற்றோர்கள் சென்று வந்தனர்.
வருடங்கள் ஓடின, எங்களின் நட்பு, மின் அஞ்சல் மூலமாக தொடர்ந்தது. அவ்வப்போது, இணையத்தில் பேசியும் கொள்வோம். அதன் விளைவாகவே இன்று நான் பெற்ற, அவளின் சகோதரனின், எனது நண்பனின் திருமண நிகழ்ச்சி அழைப்பு.



நான், கண்டிப்பாக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பினேன். நான் இப்போது சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஆகையால், சென்னையில் இருந்து, எனது சொந்த ஊர் புதுக்கோட்டை சென்று, என் பெற்றோருடன் கோவை செல்லலாம் என நினைத்தேன். என் பெற்றோரும் அதற்க்கு சம்மதம் அளித்தனர். நானும், என்னுடைய பெற்றோர்களும் புதுகையில் இருந்து கோவை சென்று அடைந்தோம். எனக்கு நன்கு தெரியும், அவர்கள் எங்களுடன், அதிக நேரம் இருக்க முடியாது என்று, இருப்பினும் அவர்களை காண வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அங்கு சென்று இருந்தோம்.



மண்டபம் சென்று அடைந்து, அவளையும், அவளின் குடும்பத்தினர் அனைவரையும் சந்தித்து சில மணித்துளிகள் பேசி மகிழ்ந்தோம். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். விடை பெறும் நேரமும் வந்தது. பிரியா விடைப் பெற்றுக்கொண்டு வந்தோம்.



விடை பெற்ற நொடியோ... இன்னும் என்னுள் விடைபெறாமல்...



கோவையிலிருந்து, இரவு பயணம் பேருந்தில்... ஜன்னல் ஓர இருக்கை, நெரிசல் இல்லாத சாலை, இதமான குளிர்ந்த காற்று... பெருவாரியான பயணிகள் உறங்கிக்கொண்டிருக்க, என்னை என் நண்பர்களின் நினைவுகள் ஆட்கொண்டன...



நிஜங்களை விட நினைவுகள் தான் இனிமையானவை.....



காலங்கள் கடந்து போகும் நேரத்தில், நான் கண்ணீரோடு திரும்பிப் பார்க்கிறேன் நாம் பழகிய நாட்களை... மீண்டும் வருமா என்று...

நம்பிகையுடன் அந்த நாளை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அன்பு சிநேகிதன்......